×

பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை பார்த்து உடல் பருமனை குறைக்க சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு: முதல்வர் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை விசாரணை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை பார்த்து உடல் பருமனை குறைக்க சிகிச்சை பெற்ற வாலிபர் இறந்தார். முதல்வர் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகர் புதுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகன் ஹேமச்சந்திரன் (26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். 150 கிலோ எடையுடைய ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக நாளுக்குநாள் அவதியுற்று வந்துள்ளார். இதனிடையே, யூடியூப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை அணுகினார்.

இதையடுத்து, மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க மருத்துவர்கள் கடந்த 22ம்தேதி ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் ஹேமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமச்சந்திரனின் பெற்றோர், பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக இறந்ததாக கூறி, பம்மல் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வரிடமும் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் நேற்று சென்னை மருத்துவத்துறை இணை இயக்குனர் தீர்த்தலிங்கம் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், ஹேமச் சந்திரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பணியில் இருந்த செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பம்மல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை பார்த்து உடல் பருமனை குறைக்க சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு: முதல்வர் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,YouTube ,Health Department ,Chief Minister ,Selvanathan ,Pudupalayam Street, Thiruvalluvar Nagar, Pondicherry ,Hemachandran ,Uttara ,
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...